This piece was originally published in English here.
சமீபத்தில் நடந்து முடிந்த 2017 சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கு அறம் என்ற சொல் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கேள்வியுற்றபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். சிங்கப்பூரிலுள்ள அனைத்துத் தமிழர்களும் அறிந்த, தொடக்கப்பள்ளியில் முதல் பாடமாக படித்த ஆத்திச்சூடி ‘அறம் செய விரும்பு’. அதுமட்டுமல்லாமல், தமிழ் முரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய தமிழ்க் கலை வகைகளும் இடம்பெற்றன. இதைக் கண்டு பல தமிழர்கள் தங்கள் கருத்துகளை பெருமையுடனும், பெருமிதத்துடனும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொண்டனர்.
இந்த விழாவும், அதைச் சார்ந்த நிகழ்ச்சிகளும், தமிழ்மொழியின் அங்கீகாரத்திற்குத் தேவையான உந்துதலையும், உத்வேகத்தையும் அளித்தன எனலாம். கடந்த சில ஆணடுகளாக அதிகாரத்துவ தகவல் அறிக்கைகளிலும், அறிவிப்புக் குறியீடுகளிலும், பலகைகளிலும் மொழிப்பெயர்ப்புத் தவறுகள் பல சமயங்களில் இடம்பெற்றுள்ளன. இதனைச் சரி செய்ய ஓர் அரசாங்க ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இல்லங்களில் ஆங்கில மொழியின் புழக்கம், தமிழ் அல்லாத மற்ற இந்திய மொழிகளின் வளர்ச்சி, சிங்கப்பூரில் நம் தாய்மொழியான தமிழ்மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றிய கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளன.
தமிழ்மொழியின் பயன்பாடு
சிங்கப்பூரில் 9 விழுக்காடு மக்கள் இந்தியர்களாவர். இந்தியச் சமூகத்தில் பெரும்பாலானோர் தமிழினத்தையே சேர்ந்தவர்கள் (கிட்டத்தட்ட 55%). சுமார் 189,000 குடியிருப்பாளர்கள் தமிழ்மொழியை பேசுகின்றனர் (Department of Statistics, Singapore 2010).
சிங்கப்பூரின் அரசு தமிழ்மொழியை ஓர் அதிகாரத்துவ மொழியாக அறிமுகப்படுத்தியதிலிருந்து இன்று வரை, நம் தாய்மொழியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. உதாரணத்திற்கு, 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், வளர்தமிழ் இயக்கம் ஏப்ரல் மாதத்தில் தமிழ்மொழி மாதத்தை ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த பல்லாண்டுகளில் இந்தத் திட்டம் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. 2017-ல் நடைபெற்ற தமிழ்மொழி மாதத்தில் 45 சமூக அமைப்புகள் இணைந்து 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன. அத்துடன் மொழி ஆர்வலர்களும், தொண்டூழியர்களும் ‘தமிழ்மொழி மின்னிலக்க மரபுடைமை குழு’ எனப்படும் குழுவை தோற்றுவித்தனர். இக்குழு, SG50-யை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுடன் தொடர்புக்கொண்டு, அவர்களுடன் இணைந்து, தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு, சிங்கப்பூரின் தமிழ் எழுத்துப் படைப்புகளை மின்னிலக்க ஆவணமாகச் செய்தது.
இதுபோன்று, அரசாங்கமும், தனியார் நபர்களும் தமிழ்மொழியின் வளர்ச்சியில் பல்வகைத் திட்டங்களை அமுல்படுத்தினாலும், இளைய தலைமுறையினர் தமிழில் பேசுவார்களா, மொழியைப் பயன்படுத்துவார்களா என்ற ஐயம், குறுகுறுக்கும் கவலை பலரின் மனதில் எழுந்துள்ளது. புள்ளிவிவரங்களைக் கவனிக்கையில், இது ஒரு நியாயமான கவலையாகவே தோன்றுகிறது. 2005-ம் ஆண்டில், இந்திய சமூகத்தில், 42.9 விழுக்காட்டினர், வீட்டில் தமிழ்மொழியைப் பேசிப் புழங்கிக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 38.8 விழுக்காட்டினரே தமிழ்மொழியை இல்லத்தில் பயன்படுத்துகின்றனர் (Department of Statistics, Singapore 2015). இந்திய சமூகத்திலுள்ள பெரும்பாலானோர் ஆங்கில மொழியிலேயே எளிதில் உரையாடுகின்றனர். இதனால், பல பெற்றோரின் கேள்வி – தமிழ் படித்தால் பொருளாதார ரீதியில் என் பிள்ளைக்கு லாபம் கிட்டுமா?
ஆயினும், பொருளாதார கணிப்பைக் கொண்டு மட்டுமே ஒருவர் தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடை போட முடியாது. அப்படிச் செய்வது தவறும் கூட. இதையே நம் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ, 1978-ன் தேசிய தின உரையில், “தன் இன, மொழி அடையாளத்தை இழந்த ஒருவர் தன்னம்பிக்கையை இழக்கிறார்…அடையாளத்தைப் பறிகொடுக்கிறார்…” என்று கூறினார். “நான் யார்?” என்று ஆழ் மனது எழுப்பும் வினாக்களுக்கு பதிலளிப்பது தாய்மொழிதான். நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைப் படிப்பது, அதில் தேர்ச்சி பெறுவது, அதனை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது – இவையனைத்தும் நம் கலாச்சாரக் கட்டமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. ‘பொங்கலோ பொங்கல்’ என்று தமிழில் வாழ்த்துவதிலும், ஒரு தமிழ்த் திரைப்படத்தைக் குடும்பத்துடன் தீபாவளியன்று பார்ப்பதும் சுகம் தரும், மனதளவில் இன்பமளிக்கும், தன்னம்பிக்கையூட்டும் அனுபவங்கள்.
அதனால், தமிழ்மொழியை வலுப்படுத்த முதல் வழி, நம் மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் நம் கலாச்சாரத்தின் மீதும் ஒரு நீங்கா பற்றை இளவயதிலேயே எரிகிற விளக்காக பற்ற வைப்பதேயாகும். இரண்டாவதாக, எல்லா இனத்தவர்களுக்கும், தமிழ் சிங்கப்பூரில் ஓர் அதிகாரத்துவ மொழி என்ற அறிதலும், ஆழ்ந்த புரிதலும் உருவாக்குதல் தேவை. மூன்றாவதாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் இளையர்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழில் பேசினால்தான், நம் மொழியின் நிலையை மேம்படுத்த முடியும். அவர்கள் கலை, அறிவியல், கல்வி நிபுணர்களாக இருக்கலாம், தொழில் வல்லுநர்களாக இருக்கலாம், எந்தத் துறையைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் – ஆனால் தமிழில் பேச வேண்டும்.
தமிழ்மொழியின் மீது நீங்கா பற்றை உண்டாக்குதல்
நம் தமிழ்ச் சமூகம், வீட்டில் தமிழ் பேசாத மாணவர்களை ஈர்க்கும் வகையில் புத்தாக்கச் சிந்தனையோடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். எடுத்துக்காட்டாக, அனைத்துத் தமிழ் மாணவர்களும் அவர்களின் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் காலங்களில் ஒரு தமிழ் கலை நிகழ்ச்சியைக் கட்டாயம் பார்க்க வேண்டும். தேசியக் கலை மன்றத்தின் கலைக் கல்வி திட்டத்தைத் தழுவி, இயல், இசை, நாடகம் என்ற மூன்று கலைகளை அனுபவிக்கும் வாய்ப்பை நம் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரலாம். தற்போதைய நிலையில், ஆசிரியர்களின் சுயேச்சையான முடிவுகளை பொறுத்துத்தான் மாணவர்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால், இதனை அமைப்புமுறைக்குள் உட்படுத்துவது (அதாவது ஆங்கிலத்தில் institutionalise என்பார்கள்) அவசியம். இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான உன்னத வாய்ப்பைத் ‘தமிழ் மொழி மாதம்‘ வழங்குகிறது. ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே பள்ளி ஆசிரியர்களிடம் நிகழ்ச்சிகளின் தேதி, நேரம் போன்ற விவரங்களை பகிர்ந்துக்கொண்டால், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை அவர்களுக்கு விருப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்லலாம். அத்துடன், மாணவர்களையும் பொதுக் குடியிருப்புவாசிகளையும் கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடங்களை மாற்றியமைக்கலாம்.
அடுத்ததாக பல சமூகத் தமிழ் அமைப்புகள் மாணவர்களுக்காகப் பேச்சு கதைச்சொல்லும், கவிதை எழுதும் மற்றும் பாடல் போட்டிகளை ஏற்பாடு செய்கின்றன. இது பாராட்டத் தக்கதாக இருந்தாலும், தமிழை வீட்டிலேயே பேசாத மாணவர்களால் கவிதை நடையில் எப்படி மேடையில் பேச முடியும்? நம் போட்டிகளை இன்னும் ஜனரஞ்சகமாக்குவதற்கும், புதிய பங்கேற்பாளர்களை வரவேற்பதற்கும், நாம் வேறு விதமான உத்திகளை கையாள வேண்டும். இதற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டாக விளங்குபவர் 2017-ல் சிங்கப்பூர் இளையர் விருதை வென்ற திரு ஷபீர் டபாரே அலாம். இவர், 2012ல் ‘சிங்கை நாடு’ என்னும் புகழ்பெற்ற தேசிய தினப் பாடலை இயற்றிப் பாடினார். அதுவரை தமிழ் தேசியப் பாடல் என்றால் ‘முன்னேறு வாலிபா’ மட்டுமே என்ற கருத்தை உடைத்து பல்வேறு வயதினரையும் அவர் அப்பாடலை முணுமுணுக்க வைத்தது ஒரு சாதனைதான். அதனைத் தொடர்ந்து 2013ல், ‘எதுகை’ என்ற பாடல் இயற்றும் போட்டியை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்தார். பலதரப்பட்ட மொழித்திறன்களையும், இசைத்திறன்களையும் கொண்ட மாணவர்களை ஈர்த்த இதுபோன்ற போட்டிகளுக்கு ஆசிரியர்களும், இல்லத்தில் தமிழ் பேசாத பெற்றோரும் ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மற்ற இனத்தவருக்கும் தமிழைப் பற்றிய ஆழ்ந்த அறிதல்
அடுத்து, சிங்கப்பூரின் பல இன சமுதாயத்தில், தமிழை கட்டிக்காக்க, மற்ற இனத்தவரும் தமிழ்மொழி ஒரு அதிகாரத்துவ மொழி என்பதை அறிவதோடு, மொழியின் வரலாற்றையும், தமிழர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்கைப் பற்றியும் ஆழமாக அறிய வேண்டும். 2019ல் நம் நாட்டின் இருநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டாடும் வகையில் நடைபெறவிருக்கும் ‘Bicentennial Celebration’ இதற்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், அனைத்து சிங்கப்பூர் மாணவர்களும் பள்ளியின் தேசியக் கல்விப் பாடங்களின் போது, குறைந்தது ஒரு தவணைக்காவது தங்கள் தாய்மொழி அல்லாத மற்ற அதிகாரத்துவ மொழிகளைப் படிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். தற்போது பெரும்பாலான மாணவர்கள், சீன மொழியில் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணவது, மலாய் மொழியில் தேசிய கீதத்தைப் பாடுவது, தமிழில் ‘முன்னேறு வாலிபா’ பாடலைப் பாடுவது மட்டுமே மற்ற மொழிகளை அறியும் முயற்சியின் உச்சமாகக் கருதுகிறார்கள். மாணவர்கள் பல இன, பன்மொழி சமுதாயத்தில் வெறும் கொள்கைகளை உதட்டளவில் உச்சரிக்காமல், உள்ளத்தளவில் மாற்றம் காண்பது இன்றியமையாதது. ஆதலால், மாணவர்கள் அதிகாரத்துவ மொழிகளில் ஓர் அடிப்படையளவில் உரையாடுவதற்கும், கலாச்சார விழுமியங்களை கற்கும் வகையில் பாடத்திட்டங்களை வடிவமைக்கலாம். ஒரு மலாய் மாணவர், ‘சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம்…’ என்று தமிழில் தேசிய உறுதிமொழியைக் கூறும்போது ஏற்படும் பெருமிதம் அலாதியானது என்றே கூற வேண்டும்.
தமிழ்ச் சமூக அமைப்புகளும், ஆங்கிலம்-தமிழ் கலந்த இருமொழி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். உடனே ‘நம் தமிழ்மொழியின் தரம் குறைந்து விடுமே?’ எனும் அச்சம் வரலாம். ஆனால், மொழிப்பற்று எனும் பெயரில் தமிழில் புலமையும் ஆளுமையும் கொண்ட சிலர் மட்டும் மீண்டும், மீண்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் யாருக்குப் பயன்? தமிழில் மிகுந்த ஆளுமையோ பரிச்சயமோ இல்லையென்றாலும், தமிழர்களோ அல்லது மற்ற இனத்தவர்களோ, தமிழ்ச் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் எனும் நம்பிக்கையை உண்டாக்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? முதலில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும், பன்முகத்தன்மையும் அதிகரிக்கும். இரண்டாவதாக, மற்ற இனத்தவர்களிடையே கலாச்சார ரீதியில் புரிந்துணர்வை மேம்படுத்தலாம். மூன்றாவதாக, க.து.மு இக்பால் போன்ற பிரபலமான, விருதுகள் வென்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் துடிப்புடன் விளம்பரம் செய்வதால் மற்ற இனத்தவரும் நம் மொழியின் எழுத்துப் பொக்கிஷங்களை அனுபவிக்கலாம்.
தமிழர்களின் நிபுணத்துவ நிலையை மேம்படுத்தல்
ஒரு மொழியைப் பற்றிய நம் கண்ணோட்டம் பெரும்பாலும் அதன் சமூகப் பொருளாதார நிலையைப் பொறுத்து அமைகிறது என்றால் அது மிகையாகாது. நம்மில் சிலர் இன்னும் தமிழைக் கூலிகள் பேசும் மொழியாக கருதுகின்றனர் (Schiffman 2003, 106). ஆங்கிலேயரின் காலனித்துவ காலத்தில் தோன்றிய இந்த கண்ணோட்டம் இன்னும் சிலர் மனங்களில் மாறாதது தவறே என்றாலும், இவ்வெண்ணங்களை மறுவடிவமைப்பது தமிழர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழர்கள் அரசாங்கத் துறையிலும், தனியார்த் துறையிலும் சிறந்து விளங்க, இருமொழிகளையும் கற்றுத் தேர்ந்து, பேசுபவர்களாக திகழ வேண்டும்.
அமைச்சர்கள், அரசாங்கத் துறையில் மூத்த அதிகாரிகள், தனியார்த் துறைத் தலைவர்கள் தமிழில் பேசினால் கண்ணோட்டங்கள் நிச்சயமாக மாறும். இதற்குச் சட்ட மற்றும் உள்துறை அமைச்சரான திரு க. சண்முகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நம் நாட்டை பிரதிநிதித்து, ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி, நாடு திரும்பிய உடனே, இங்குள்ள சமூக நிகழ்ச்சிகளில் தமிழ் பேசுவதைக் கண்டு களித்த பலரில் நானும் ஒருவன். அதே போல, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரனும், செம்பாவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயரும் பாராட்டத்தக்க உதாரணங்கள். இவர்களைப் போன்ற முன்னுதாரணங்கள் சமூக நிகழ்ச்சிகளிலும், பொது மேடைகளிலும் தமிழைப் பயன்படுத்தினால், வருங்காலத்தில் சிங்கப்பூர் இளையர்கள் தமிழை எவ்விதத் தயக்கமுமின்றி பேசுவர். இதுபோன்ற வழிகாட்டிகள் வருங்காலத்தில் மலர, தமிழ் மாணவர்களும் முக்கியத் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும்; தலைமைத்துவப் பொறுப்புகளை தேடி ஏற்க வேண்டும். அவர்களும் வருங்காலச் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக, முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அத்தகைய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
முடிவாக, இந்த ஆலோசனைகள் முழு நிவாரணிகள் அல்ல. தமிழ்மொழி சிங்கப்பூரில் செழிக்க நாம் எடுக்கக் கூடிய முதற்படிகள். மேற்குறிப்பிட்ட தடைக்கற்களைத் தகர்த்தெறியும் வேளையில், நம் சமூகம் சற்று நீக்கு போக்கற்று மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் நேரலாம். சிங்கப்பூரில் தமிழ் அல்லாத மற்ற இந்திய மொழிகளின் வளர்ச்சியால், நாம், தனிமைப்படுத்தப்படுவதாகக் கூடத் தோன்றலாம். ஆனால், மொழிப்பற்று வேறு, மொழிப் பேரினவாதம் வேறு. இதை நாம் நன்கு உணர வேண்டும். சிங்கப்பூரில் தமிழ் அல்லாத மற்ற இந்திய மொழிகளின் வளர்ச்சி குறிப்பாக நம் இந்தியச் சமுதாயத்திலும், பொதுவாகச் சிங்கப்பூரிலும் பற்பல புதிய வரவேற்கத்தக்க அம்சங்களைக் வெளிக்கொணர்ந்துள்ளன. ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி அன்று முழங்கியதற்கு ஏற்ப, இந்தியச் சமூகத்தில் பெரும்பான்பையினரான நாம் பரந்த மனப்பான்மையுடன் அனைவரையும் வரவேற்பதால் வலுவடைவது நம் மொழியே!
வாழ்க தமிழ்! வளர்க சிங்கையில் தமிழ்மொழி!